தமிழ்நாடு மின்வாரியம் மின் மாற்றி, மின் வினியோக பெட்டி, உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் மாநிலம் முழுவதும் மின் வினியோகம் செய்து வருகிறது.
இந்த சாதனங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் சென்றுக்கொண்டிருப்பதால் அவை அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால் துணைமின் நிலையம், மின் சாதனங்களில் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு பழுது ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அந்த பணி நடைபெறும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இது தொடர்பான தகவல் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
பள்ளி பொதுத்தேர்வு, கல்லூரி, கோடை வெயில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணங்களால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை மின் தடை இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வெயில் மற்றும் மின் சாதனங்களின் ஓவர்லோடு காரணமாக மின்தடை ஏற்பட்டது.
தற்போது பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள், மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில், மீண்டும் பராமரிப்பு பணிகளை மின்வாரியம் தொடங்கியுள்ளது. அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் பகலில் மின் தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.