முட்டையை தலைமுடிக்கு பயன்படுத்துவதா? அதிலும் முட்டையின் மஞ்சள் கரு என்றால் சொல்லவே வேண்டாம். முட்டையில் இருந்து வீசும் கவிச்ச வாடை காரணமாக பலர் முட்டையை தலைமுடிக்கு பயன்படுத்துவதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் இயற்கையான பட்டு போன்ற, பொலிவான கூந்தலை பெறுவதற்கு மற்றும் பல்வேறு தலைமுடி சார்ந்த நன்மைகளை அடைய முட்டை ஒரு சிறந்த பொருளாக அமைகிறது.. இப்போது அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெறுவதற்கு தலைமுடியில் முட்டையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
முட்டையை வைத்து எளிமையான ஒரு ஹேர் மாஸ்க் :
உங்களது தலைமுடியை கண்டிஷன் செய்வதற்கு மூன்று முட்டைகளின் மஞ்சள் கருக்களை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்றாக கலந்து தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து ஸ்ட்ராங்கான, நல்ல வாசனை கொண்ட ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
தேன் மற்றும் முட்டை :
2 முதல் 3 முட்டை மஞ்சள் கருக்களை தேனுடன் கலந்து தலைமுடியில் தடவி, சிறிது நேரம் ஊறிய பின் நல்ல ஷாம்பு பயன்படுத்தி உங்களது தலை முடியை அலசலாம். இதனால் வறண்ட தலைமுடி பொலிவாக மாறுகிறது.
முட்டையுடன் வேப்ப எண்ணெய் :
மயிர்க்கால்களில் அடிக்கடி அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள் முட்டையின் மஞ்சள் கருவோடு வேப்ப எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது.
பாதாம் எண்ணெய் மற்றும் முட்டை :
நீண்ட மற்றும் வலிமையான முடியை பெறுவதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக கலந்து தாராளமாக தலைமுடியில் பயன்படுத்துங்கள்.
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் :
2 முட்டைகளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்துவது ஒட்டுமொத்த தலைமுடியின் வளர்ச்சிக்கு பங்களித்து, தலைமுடியின் ஈரப்பதத்தை தக்க வைத்து, ஆரோக்கியமான தலைமுடியை பராமரிக்க உதவுகிறது.
எலுமிச்சை சாற்றுடன் முட்டை :
பேன் தொல்லை இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழ சாற்றுடன் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து தலைமுடியில் தடவி ஷவர் கேப் அணிந்து 5 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தலைமுடியை அலச வேண்டும்.
தயிர் மற்றும் முட்டை :
இந்த ஹேர் மாஸ்க் உங்களுக்கு அரிப்பு நிறைந்த மயிர்க்கால்கள் மற்றும் பொடுகிலிருந்து நிவாரணம் பெற உதவும். எனினும் மழைக்காலத்தில் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குறிப்பாக உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் இந்த ஹேர் மாஸ் உங்களுக்கானது அல்ல.