தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் தயாராகி இருக்கிறது. ஞானவேல் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. வேட்டையன் படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இமயமலைக்கு சென்றார்.
இமயமலையில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள புனித ஸ்தலங்களுக்கு சென்றுவிட்டு சில தினங்களுக்கு முன் சென்னை விரைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், வருகிற ஜூன் 10-ந் தேதி கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறினார். ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி பட ஷூட்டிங் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் இந்த சூழலில் ரஜினிகாந்த் டெல்லிக்கு விரைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் டெல்லியில் வருகிற ஜூன் 8-ந் தேதி நடைபெற உள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கலாம் என கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் தற்போது டெல்லியில் உள்ளதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக ரஜினிகாந்த் அங்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் ரஜினி மோடியையும் சந்தித்து அவரின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.