உடலுறவு என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. வெறும் சந்ததிகளை உருவாக்குவதைத் தாண்டி, ஹார்மோன் மற்றும் மனநலம் சீராக இருப்பதற்கு உடலுறவு மிகவும் முக்கியமாக இருக்கிறது. இந்த நிலையில், நீங்கள் திடீரென உடலுறவை நிறுத்தினால், உடலியல் மாற்றங்கள் ஏற்படும்.
மனித உடலைப் பொறுத்தவரை ஆக்ஸிடாஸின், ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள் தான் செக்ஸ் ஆர்வத்தை தூண்டுகிறது. குறிப்பாக, ஆக்ஸிடாஸினை காதல் ஹார்மோன் என்று அழைக்கிறார்கள். இது காதல் மற்றும் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது. பாலியல் செயல்பாடுகள் நிறுத்தப்படும்போது, இந்த ஹார்மோன் அளவு குறையக் கூடும். இது மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் எதிர்காலத்தில் உடலுறவுக்கான விருப்பத்தையும் பாதிக்கும்.
பாலியல் ஆசைகளை குறைக்கும்போது பெண் குறிக்கான ரத்த ஓட்டம் குறையும் என்றும், இதனால் எதிர்காலத்தில் உடலுறவின்போது லூப்ரிகன்ஸ் இல்லாமல் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட இடைவெளியில் பாலியல் உறவில் ஈடுபடும்போது மன அழுத்தத்திற்கு நிவாரணமாக இருக்கும் என்றும், உடலுறவை நிறுத்திக் கொண்டால், அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.
வழக்கமான பாலியல் செயல்பாடுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், பாலியல் செயல்பாடு குறையும்போது, நோயெதிர்ப்பு மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, உடலுறவை முற்றிலும் நிறுத்துவது சில சமயங்களில் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தும் என்றும் மும்பை ரயில்வே மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் சோனம் சிம்பத்குமார் கூறுகிறார்.
பாலியல் உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், ஒரு சிலருக்கு திடீரென ஆசை அதிகரிக்கும். இதற்கு பற்றாக்குறை உணர்வின் காரணமே என்றும், முழுமையான உடலுறவில் ஈடுபடுவதற்கு போதுமான சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
”ஒருவேளை உடலுறவில் இருந்து ஓய்வெடுக்க முடிவு செய்தால், பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களை மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அத்துடன், ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை என்பது ஒரு தனிப்பட்ட பயணம் போன்றது என்பதால், அது பாதிக்கப்படும்போது மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்” என்றும் சோனம் சிம்பத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.