தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்து கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துவிட்டார். அவர் நடிப்பில் தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இது தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தை அட்லீ தான் தற்போது தயாரித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் பான் இந்தியா நடிகையாக உருவெடுத்ததால் அவர் நடிக்கும் படங்களும் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரகு தாத்தா. இப்படத்தை கேஜிஎப், காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் சுமன் குமார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திரா விஜய், ஜெயக்குமார், ராஜீவ் ரவீந்திரநாதன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யாமினி யாக்னாமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில், ரகு தாத்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அதற்கு போட்டியாக களமிறங்க உள்ளதை கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படக்குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.