கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை..! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

by Editor News

கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கோட்டயத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் இன்று தொடங்கிய பருவமழை படிப்படியாக அனைத்து மாநிலங்கள் என ஜூலை மாதம் மத்தியில் நாடு முழுவதும் பரவும்.

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபார் தீவுகளில் கடந்த 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

கேரளாவில் அடுத்த 5 நாட்கள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியைவிட அதிகமாக பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment