மாதவிடாய் சுகாதார தினம் (Menstrual Hygiene Day) ஒவ்வொரு ஆண்டு மே 28 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த நாள், மாதவிடாயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் உதவுகிறது. இந்நாளில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக பல நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில் மாதவிடாய் நாட்களில் எந்த மாதிரியான சுகாதார விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
1. நாப்கின்களை மாற்றுதல்:
ஒவ்வொரு 3-5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும். நீண்ட நேரம் ஒரே நாப்கினை பயன்படுத்துவதால், பிறப்புறுப்பு மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் மற்றும் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளை ஏற்படுத்தும்.
2. மென்சுரல் கப் :
மென்சுரல் கப் நாப்கினிற்கு ஒரு நல்ல மாற்று ஆகும். அதைப் பயன்படுத்தும் போது நன்றாக கிருமி நீக்கம் செய்து, சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும்.
3. நாப்கின்களை அப்புறப்படுத்துதல்:
பயன்படுத்திய நாப்கின்களை கிடைக்கும் இடத்தில் அப்படியே போடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான காகிதம் அல்லது ரேப்பரில் சுற்றி அப்புறப்படுத்துவது அவசியம்.
4. காற்றோட்டமான ஆடை:
தளர்வான மற்றும் காற்றோட்டமான காட்டன் ஆடைகளை அணிவது சௌகரியமாக இருக்கும். இறுக்கமான ஆடைகள் அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தலாம். இதனால் உங்களுக்கு அசௌகரியமாகவும் , எரிச்சல் உணர்வும் தோன்றலாம்.
மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசுதல்:
மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசுவது மிகவும் முக்கியம். இதனால் பெண்கள் மற்றும் சிறுமிகள் இது தொடர்பான தவறான புரிதல்கள் இல்லாமல் சுகாதாரமான பழக்கவழக்கங்களை பின்பற்ற உதவியாக இருக்கும்.
மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும், சிறுமியும் இதை அறிந்து, ஆரோக்கியமான முறையில் மாதவிடாய் காலத்தைக் கடந்து செல்ல உதவுவதில் மாதவிடாய் சுகாதார தினம் முக்கிய பங்காற்றுகிறது. பெண்கள் அனைவரும் சுகாதாரமாக இருந்தால், நோய்த் தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் தடுக்கப்படும்.