தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால், புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் ஆறாம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த உடனேயே புதிய பஸ் பாஸ் வழங்குவது சாத்தியமில்லாததாலும் அதே நேரத்தில் மாணவர் சேர்க்கை முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும். அதுவரை மாணவ மாணவிகள் தங்களுடைய பள்ளி அடையாள அட்டை மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை பேருந்துகளில் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகள் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மாணவ, மாணவியரின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.