வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் போர் ஒத்திகை போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
தென் கொரியாவைக் கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.
இந்நிலையில், அடுத்த வாரமும் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளதாக வட கொரியா இன்று அறிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின்னர், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா (Fumio Kishida) மற்றும் சீனப் பிரதமர் லி கியாங்கை Li Qiang) ஆகியோர் சியோலில் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதே, வடகொரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் வடமேற்கிலுள்ள டோங்சங்கிரி ஏவுதளத்தில் உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளின் அறிகுறிகளைக் கண்டறிந்ததாக தென் கொரிய இராணுவம் சமீபத்தில் கூறியிருந்தது.
வட கொரியாவின் இந்த திட்டத்திற்கு அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை ஏவுவது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறும் செயல் என்றும், இது பிராந்தியம் மற்றும் உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் என்றும் இன்று நடந்த முத்தரப்பு சந்திப்பின்போது தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) தெரிவித்துள்ளார்.