பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தது. ஊழலை எதிர்க்கும் இந்தியன் தாத்தா கேரக்டரில் கமல்ஹாசன் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
இந்தியன் தாத்தா கேரக்டரில் தரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இத்தகைய மாஸ் வெற்றியை பெற்று தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியன், திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் கமல்ஹாசன் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற ஜூலை 12-ந் தேதி இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடலான பாரா சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்துக்கு முன்னர் இந்தியன் முதல் பாகம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்தியன் திரைப்படம் வருகிற ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். அண்மையில் ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் கில்லி திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியதை போல் இந்தியன் படமும் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.