குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் புதிய பாடத்திட்டங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன.
ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும் தேர்வாணையம், ஒரு சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்து வருகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ நிலையில் உள்ள பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும் என்று அறிவித்தது.
மேலும், குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வும் கிடையாது என்று குறிப்பிட்டது. இந்நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும்,
குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 2 முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதி தாளும், பொது அறிவும் விரிவாக விடையளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதி தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையை தேர்வு செய்யும் வகையிலும் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பொது அறிவுத்தாளில், 50 சதவிகித வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவிகித வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்கும், 30 விழுக்காடு வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு திட்ட அட்டவணைப்படி, இரண்டாயிரத்து 30 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ-க்கான தேர்வு அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதி வெளியாக வேண்டும்.
எனவே, அதற்கு ஏற்ற வகையில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.