என்னதான் வெயில் ஒருப்பக்கம் வாட்டி வதைக்கிறது என்றாலும் கூட, தேநீர் விரும்பிகளுக்கு ஒரு கப் சூடான டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. குறிப்பாக, வீட்டில் டீ குடித்தாலும் அல்லது கடைகளில் டீ அருந்தினாலும் கூடவே எதோ ஒரு ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது. மக்களின் ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிளாக் டீ, மசாலா டீ, லெமன் டீ என பல்வேறு வகையான டீ கிடைக்கிறது. குறிப்பாக, ஒயிட் டீ-யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது நமது உடலின் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
நாள் முழுவதும் சோர்ந்து, களைத்து போய் இருப்பவர்களுக்கு உற்சாகம் தருவதாக டீ இருக்கிறது. என்னதான் டீ அருந்துவதில் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன என்றாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடும் மற்ற ஸ்நாக்ஸ் அல்லது உணவுகள் நம் உடல் நலனுக்கு கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். ஆகவே, அதுகுறித்து கவனமுடன் இருக்க வேண்டும்.
மைதா அல்லது கடலை மாவில் செய்யபட்ட தின்பண்டங்கள் :
வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு ஒரு கப் டீ உடன், மைதா அல்லது கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களை பரிமாறுவது நமது பண்பாட்டு பழக்கமாக இருக்கிறது. இவ்வளவு ஏன், நாமே கடைக்கு டீ அருந்தச் சென்றாலும் முதலில் பஜ்ஜி அல்லது கடலை மாவு பக்கோடா, மைதா மாவு போண்டா போன்றவற்றை ஒரு ரவுண்டு கட்டிவிட்டு தான் டீ அருந்துகிறோம். ஆனால், டீ உடன் இதுபோன்ற பலகாரங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமாணம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வரும். வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பச்சைக் காய்கறிகள் :
சிலர் பச்சைக் காய்கறி உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ அருந்துவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறானது. காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள், குறிப்பாக இரும்புச் சத்தை உடல் ஈர்த்துக் கொள்ளும் செயல்திறனை பாதிப்பதாக டீ அமைகிறது.
எலுமிச்சை :
நம்மில் பலருக்கு லெமன் டீ மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால், இது வயிறு நலனுக்கு நல்லதல்ல என்பது பலருக்கு தெரியாது. டீ தூளும், எலுமிச்சை சாறும் ஒன்று சேரும் போது வயிற்றில் அசிடிட்டி, உப்புசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மஞ்சள் :
அதிகம் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடும் போது, டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். டீ மற்றும் மஞ்சளில் உள்ள ரசாயன பொருட்கள் ஒன்று சேரும் போது நமது ஜீரண சக்தியை பாதிக்கும். குறிப்பாக ஆசிட் ரிஃப்லக்ஸ் பிரச்சினையை கொண்டு வரக் கூடும்.
நட்ஸ் :
நட்ஸ் வகைகளில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. டீ-யில் உள்ள டெனனின் என்ற வேதிப்பொருள் இந்தச் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளாமல் தடுக்கிறது. ஆகவே, டீ உடன் நட்ஸ் வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.