டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறக்கப்பட்ட வடிவேலு!

by Editor News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் நடுவராக கலக்கி வந்த வெங்கடேஷ் பட், இம்முறை அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவிக்கு தாவி இருக்கிறார். சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புது சமையல் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கெடுத்து உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான் தற்போது தயாரித்து வருகிறது.

இந்நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காப்பி என ஆரம்பத்தில் பலர் விமர்சித்தாலும், நேற்றைய எபிசோடு மூலம் இதில் பல்வேறு புதுமைகள் இருப்பது தெரியவந்தது. அதன்படி இந்நிகழ்ச்சியில் உள்ள 9 போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு செஃபும் தலைவராக ஒதுக்கப்படுவர். அதில் எந்த அணியில் இருந்து போட்டியாளர் எலிமினேட் ஆகிராரோ, அவரோடு சேர்த்து அந்த அணியை சேர்ந்த செஃபும் வெளியேற வேண்டும்.

அதுமட்டுமின்றி இந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் குக்குகளாக பெப்சி விஜயன், சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, நரேந்திர பிரசாத், சாய் தீனா, ஷாலி நிவாஸ், சுஜாதா சிவகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் டூப் குக்குகளாக ஜிபி முத்து, தீபா, தீனா, மோனிஷா, அதிர்ச்சி அருண், பரத், கதிர், செளந்தர்யா, முகுந்த், விஜய் ஆகியோர் பங்கெடுத்து உள்ளனர். இதன் அறிமுக எபிசோடு கலகலப்புக்கு பஞ்சமின்றி இருந்த நிலையில், இறுதியில் தன்னுடன் இன்னொரு பிரபலம் இணைந்து நடுவராக பணியாற்ற உள்ளதாக ட்விஸ்ட் கொடுத்து இருந்தார் வெங்கடேஷ் பட்.

இந்த நிலையில், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வைகைப்புயல் வடிவேலு கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிட்டு புரோமோ வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அங்குள்ள டூப் குக்குகளிடம் சென்று வடிவேலு ஃபன் செய்யும் காட்சிகள் அந்த புரோமோ வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இந்த சீசனில் அவர் நடுவராக கலந்துகொள்ள உள்ளாரா அல்லது சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் வடிவேலு வரவால் அடுத்த வார எபிசோடு டிஆர்பி எகிறும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment