தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.
இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.