ஊழலுக்கு எதிரான தனது அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல்வாதிகளிடமிருந்து சோதனையின்போது அமுலாக்கத் துறையினர் கைப்பற்றிய 2,200 கோடி ரூபா நாட்டின் ஏழைகளுக்குச் சொந்தமான பணமாகும்.
அமுலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.
எனினும் அரசியல்வாதிகளுக்கு எதிரான சோதனையின்போது மீட்கப்படும் பணம் நாட்டின் ஏழைகளுக்கு சொந்தமானது. குறித்த நடவடிக்கைகளை நாம் எப்போதும் நிறுத்தப்போவதில்லை.
ஆட்சியில் இருந்தபோது முறைகேடான பணப்பரிமாற்றம் மற்றும் ஆட்கடத்தலை செய்ய அனுமதித்த காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி போன்ற கட்சிகள் தங்களின் வாக்குவங்கி அரசியலுக்காக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடுகளை வாரி வழங்கின.
நான் இருக்கும் வரை இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கப் போவதில்லை” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார்.