News18 Tamil“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவன் வார்த்தைக்கு ஏற்ப தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், மரம், செடி, கொடிகள் என அனைத்திற்கும் நீர் முதன்மை ஆதாரமாக உள்ளது. நீர் இல்லை என்றால் இந்த உலகில் ஒரு உயிரினம் கூட உயிர்வாழ முடியாது.
நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பூமியில் இருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பூமியின் நிலை மோசமாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் அதிக அளவு நிலத்தடி நீரை வெளியேற்றியதாக சிடெக் டெய்லி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோபிசிகள் ரிசர்ச் லெட்டர் என்பது AGU-ன் ஜர்னல் ஆகும். இது பூமி மற்றும் விண்வெளி அறிவியலுக்கான தாக்கங்களை கொண்ட ஆராய்ச்சியாகும். 1993 மற்றும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக காலநிலை மாதிரிகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
உலகின் மாபெரும் பகுதிகளான மேற்கு அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா, நிலத்தடி நீரின் பெரும் பகுதியை பயன்படுத்தியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் புவி இயற்பியலாளர் வென் சியோ, நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆடுகளாக நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு இடத்தில் இருந்து அதிக தண்ணீரை பிரித்தெடுத்த பிறகு, அது பொதுவாக ஆறுகள் மற்றும் கடல்களில் பாய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.