முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் விளங்குகிறது. மாம்பழம் இந்தியாவில் நட்பின் சைகையாகக் கருதப்படும் ஒரு பழம் என்றும் கூறப்படுகிறது. மாங்காய், மாம்பழம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது.
இந்தியாவின் முன்னணி வணிகப் பண்ணைகளில் ஒன்று மா விவசாயம்.
மாம்பழம் சிறந்த சுவை, கவர்ச்சிகரமான மணம் மற்றும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல், வைட்டமின் ஏ & சி போன்ற சத்துக்களும் இருக்கிறது. மேலும் மாம்பழம் பழங்களின் ராஜாவாக விளங்குகிறது. மாம்பழத்தில் பல ரகங்கள் இருக்கிறது. ஆண்டுதோறும் மாம்பழ சீசன் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாத இறுதி வரையில் நீடிக்கும்.
தற்போது தமிழகத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களும் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே இயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை பொதுமக்கள் நன்றாக கவனித்து வாங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும்:
1. செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழம் திட்டு திட்டாக பழுத்தியிருக்கும். அதுவே இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழம் அதன் காம்பிலிருந்து மஞ்சள் நிறத்தில் பழுத்தியிருக்கும்.
2. செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் வெட்டும் பொழுது மாங்காயைய வெட்டும் சத்தம் வரும்.
ஆனால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தினை வெட்டும் பொழுது பழத்தை வெட்டும் பதம் இருக்கும், சத்தமும் வராது.
3. டூப்ளிகேட் மாம்பழங்களில் வாசனை வராது – அதுவே ஒரிஜினல் மாம்பழத்தில் வாசனை நன்றாக வரும்.
4. செயற்கை மாம்பழத்தின் உள் பகுதி வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரிஜினல் மாம்பழத்தின் உள் பகுதி மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.
5. ரசாயனம் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை தண்ணீரில் போட்டால் மிதக்கும். ஆனால் நல்ல மாம்பழம் தண்ணீரில் போட்டால் மிதக்காது.
6. கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தில் சுவையிருக்காது. ஆனால் அப்படியே பழுக்க வைத்த மாம்பழத்தில் சுவைமிக்கதாக இருக்கும்.
பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கியவுடன் கவனத்துடன் இது செய்ய வேண்டும்:
1. மாம்பழங்களை சாப்பிடும் முன் நன்றாக ஊற வைத்து கழுவியப் பின் உண்ணவும்.
2. செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களை உண்ணும் போது, வயிறு உபாதைகள், அஜீரணக் கோளாறு, போன்றவை உடனே ஏற்படும்.
3. தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்ணுவதால் கேன்சர் போன்ற நோய்கள் உண்டாகலாம்.