சின்னத்திரை சீரியல்கள் என்றால் ஒரு காலத்தில் இல்லத்தரசிகள் மட்டும் பார்ப்பார்கள் என்கிற நிலை இருந்தது. ஆனால் சமீப காலமாக சினிமே ரேஞ்சுக்கு விறுவிறுப்பான திரைக்கதையுடன் சின்னத்திரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு இளைஞர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சின்னத்திரையில் டாப் டிரெண்டிங் ஆக உள்ள சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதோடு, இதன் திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்வதால் இதற்கான ரசிகர் வட்டம் பெரிதாகி வருகிறது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 8.18 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்ற டாப் 10 சீரியல்கள் பட்டியலில் இந்த சீரியலுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
தமிழில் சக்கைப்போடு போட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பான் இந்தியா சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் Gunde Ninda Gudi Gantalu என்கிற பெயரில் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 8.19 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதேபோல் மலையாளத்தில் ஏசியாநெட் சேனலில் Chembaneer Poovu என்கிற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு அங்கு 11 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.
மராத்தியில் ஸ்டார் ப்ரவா என்கிற சேனலில் Saadhi Manasa என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அங்கு 3.90 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இறுதியாக இந்தியில் ஸ்டார் ப்ளஸ் சேனலில் Udne Ki Aasha என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 1.50 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் தமிழ் சீரியல் ஒன்று நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.