அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த நாட்டின் மாகாணங்களில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட பண்ணைகளில் மாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, அமெரிக்காவில் கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1 வைரஸ் இருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கறந்த பாலை அருந்துவதை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு சுத்திகரிக்கப்படும்போது, பாலில் இருக்கும் கொடிய கிருமிகள் அழிந்து போவதைப் போல, பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1 வைரசும் அழிந்து போகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பாக்கெட் பாலை குடிக்கும்போது, பறவைக் காய்ச்சல் பரவாது எனக் கூறும் நிபுணர்கள், கோழி முட்டை மற்றும் இறைச்சியையும் நன்றாக வேகவைத்து சாப்பிடுவதே மிகச் சிறந்தது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, கோழி இறைச்சியை நன்றாக வேகவைத்து அல்லது நன்கு பொறித்துதான் உண்ண வேண்டும். அதேபோல், கோழி முட்டைகளையும் நன்றாக அவித்து அல்லது பொறித்து சாப்பிடுவதே பாதுகாப்பானது என நிபுணர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு செய்யும்போது, மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்டவை அழிந்துபோகும். இல்லாவிட்டால், முட்டை அல்லது கோழி இறைச்சி மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
எனவே, அடுத்த சில வாரங்களுக்கு ஆஃப்பாயில் செய்வதை ஆஃப் செய்து, கலக்கி சாப்பிடுவதை கைவிட்டால், பறவைக் காய்ச்சல் நமக்கு பரவாது என்பது உறுதி.