எல்லா கர்ப்பிணிப் பெண்களும் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றும் பாதுகாப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஆசைபடுவார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமென்றால், தாயும் அவளுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமான வளர்ச்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பேர்கால சமயத்தில் தாய்மார்கள் தேவையான ஊட்டச்சத்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிரசவ சமயத்தில் வயிற்றில் குழந்தை வளர்வதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள் பல உடலியல் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். இந்த மாற்றங்களை எதிர்கொள்ள தாயின் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் போதுமான ஊட்டச்சத்துகள் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டசத்துகளை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
ஃபோலிக் ஆசிட்:
மூளை மற்றும் முதுகுதண்டை உருவாக்கும் குழந்தையின் நரம்பு குழாயின் ஆரம்பகட்ட வளர்ச்சியின் போது போதுமானளவு ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நரம்பு குழாய் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். எனவே கர்ப்பிணிப் பெண்கள் ஃபோலிக் ஆசிட் சத்துகள் உள்ள பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ், பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கால்சியம் :
கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும். குழந்தையின் எலும்புகள் வளர்வதற்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் சத்து தேவைப்படும். பாதாம் அல்லது ஓட்ஸ் பால், ப்ரோகோலி, கோலார்ட் கீரைகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும்.
இரும்புச்சத்து :
பேருகால சமயத்தில் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக இரும்புசத்து திகழ்கிறது. சிவப்பு ரத்த அணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச்செல்ல இதுவே உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ரத்தசோகை உண்டாகும். ஆகையால் உங்கள் டயட்டில் பீன்ஸ், கீரைகள், கோலார்ட் கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மெக்னீசியம் :
பிரசவ சமயத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் உடல்நலத்திலும் ஆரோக்கியத்திலும் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கும் இதய செயல்பாட்டிற்கும் இதய நோய் வராமல் பாதுகாக்கவும் மெக்னீசியம் உதவுகிறது. பாதாம், பூசணி விதைகள், முந்திரி, அவகோடா ஆகியவற்றில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.
வைட்டமின் டி :
இந்த விசேஷமான ஊட்டச்சத்து உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கும் தாய் மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஓமேகா-3 :
குழந்தைகளின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு குழந்தையின் கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு முக்கிய உதவியாக இருக்கிறது ஓமேகா-3. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் ஓமேகா-3 உதவுகிறது. பிரசவ சமயத்தில் ஓமேகா-3 சப்ளிமெண்ட் சாப்பிடும் தாயின் பாலை குடித்து வளரும் குழந்தைகளிடத்தில் அறிவுக்கூர்மை அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக ஓமேகா-3 சத்துகள் நிறைந்த வால்நட், சியா விதைகள், ஆளி விதைகள், சோயா பொருட்களான டோஃபு ஆகியவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.