பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

by Editor News

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்றழைக்கப்படும் கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.

இந்நிலையில் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளினார். அதன்படி இன்று அதிகாலை 5.50 மணிக்கு கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தங்க குதிரையில் பச்சை நிற பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். கள்ளழகர் பச்சை நிறப் பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்று ஐதீகம்.

பல்லாயிரகணக்கான பக்தர்கள் கள்ளழகர் எப்போது ஆற்றில் இறங்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் பச்சை நிற பட்டுடுத்தி ஆற்றில் இறங்கி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்து அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Posts

Leave a Comment