2024ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.
தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீற்றர் உயரமுள்ள குகைக் கோயிலுக்கு 52 நாள் புனித யாத்திரை ஜூன் 29 திகதி ஆரம்பமாகி ஒகஸ்ட் 19 திகதி முடிவடையும் என அமர்நாத் ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன.
அதாவது, பால்டால் வழியாக குறுகிய பாதை, ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி என இரண்டு வழியாக பக்தர்கள் செல்ல
முடியும்.
இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவுகள், இந்தியா முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் 540 கிளைகளில் நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.