கேரளாவிலிருந்து பெங்களூர் பொறியியல் கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு கேங் அமைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால், இவர்கள் சந்தோஷத்தில் அந்த கல்லூரி சீனியர் ஒரு இடைஞ்சலாக வர, அதில் ஒரு சீனியரை 3 மாணவர்கள் திமிராக பேசுகின்றனர்.
பிறகு அந்த 3 பேரையும் சீனியர்கள் ஒரு ரூமில் அடைத்து வைத்து அடி அடி என்று அடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். இதில் அந்த 3 மாணவர்களும் தாங்களும் லோக்கல் சப்போர்ட் சேர்த்துக்கொண்டு அந்த சீனியர்களை அடிக்க வேண்டும் என கங்கனம் கட்டுகின்றனர்.
அப்போது தான் அந்த ஏரியாவின் டான் பகத் பாசில் நட்பு கிடைக்க, ஒரு கட்டத்தில் சீனியர்களை பகத் ஆட்களை வைத்து அடிக்கவும் செய்கின்றனர். ஆனால், அந்த மாணவர்களுக்கு பிரச்சனையே பகத் வடிவில் வர, பிறகு என்ன ஆனது என்பதன் அதகளம் தான் இந்த ஆவேசம்.
படத்தின் ஹீரோ பகத் பாசில் என்றாலும் அந்த கல்லூரி மாணவர்களாக வரும் 3 பேரும் நடிப்பில் அசத்தியுள்ளனர். அதிலும் பகத்-வுடன் அவர்கள் நட்பு ஏற்பட்டு பயந்து பயந்து பழகி, பிறகு கெத் ஆக கல்லூரிக்கு செல்வது ஒரு கட்டத்தில் பகத்திடம் இருந்து வந்தால் போதும் என அவர்கள் முழிப்பது என முதல் படம் இவர்களுக்கு என்றால் நம்ப முடியாத நடிப்பு.
பகத் கதாபாத்திரம் மனுஷனுக்கு கிடா வெட்டி விருந்து வச்சது போல் ஒரு ரோல், பின்னி பெடல், அதிலும் அம்மாக்கு செய்த சத்தியத்திற்காக யாரையும் அடிக்காமல் தன் ஆட்களை வைத்து அடிக்கும் காட்சியில் அவர் கொடுக்கும் ரியாக்ஸன் தூள்.
ஒரு கட்டத்தில் அந்த மாணவர்களை தன் தம்பி போல் பார்க்க ஆரம்பிக்க, அவர்களுக்காக கல்லூரி சென்று சீனியர்களை அடிக்கும் காட்சி பட்டாசு, சண்டை முடிந்து மலையாளம், கன்னடம் மொழியில் மிரட்டி, ஹிந்தியில் மிரட்ட ஆரம்பிக்கும் போது, ஹிந்தி வேண்டாம்ப்பா என்று சொல்லும் இடமெல்லா விசில் பறக்கிறது.
படம் முழுவதுமே காமெடி காட்சிகள் நிறைந்தே காணப்படுகிறது. பகத்தின் நம்பிக்கைக்கு உரிய அடியாளாக வரும் அம்பன் பகத் பற்றி சொல்லும் கதையெல்லாம் செம காமெடியாக ஆரம்பித்து, பிறகு அதெல்லாம் உண்மை என்று தெரியும் இடத்தில் சுவாரஸ்யம் கூடுகிறது.
படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் பயணிக்க, இரண்டாம் பாதி கொஞ்சம் தள்ளாட பிறகு பகத்தே கிளைமேக்ஸ் வரை படத்தை தாங்கி செல்கிறார், அதிலும் கிளைமேக்ஸ் பகத்தின் அடாவடியான நடிப்பு அவர் திரைப்பயணத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். மேலும் அடிதடி சத்யராஜ் கேரக்டரையும் கொஞ்சம் நியாபகப்படுத்துகிறது இந்த ரங்கா கேரக்டர்.
படத்தில் வரும் பேச முடியாத கார் ட்ரைவர், கல்லூரி முதல்வராக வரும் ஆசிஷ் வித்தியார்த், சீனியர் குட்டி ஏட்டன் மன்சூர் அலிகான் என அனைவருமெர் தங்கள் பங்கிற்கு ரகளை செய்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் ஜெயமோகன் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் மலையாள இளைஞர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள் என்பது போல் சர்ச்சையாக பேசினார். இந்த படத்தை பார்த்தால் என்ன சொல்வாரோ, ஏனெனில் கல்லூரி மாணவர்கள் என்று காட்டினாலும், போதை பொருள் எல்லாம் எதோ காலை இட்லீ சாப்பிடுவது போல் மிகவும் நார்மலைஸ் செய்துள்ளது என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ..
படத்தின் மிகப்பெரிய பலம் சுசின் ஷியாம் இசை தான், பாடல்கள், பின்னணி என அந்த ஊர் அனிருத் போல் அதகளம் செய்துள்ளார்.
க்ளாப்ஸ்
படத்தின் நடிகர், நடிகைகளின் நடிப்பு, அதிலும் பகத்தின் அரக்கத்தனமான நடிப்பு.
படத்தில் வரும் ஒன் லைனர் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஸ்டெண்ட் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது.
படம் முழுவதும் நிறைந்திருக்கும் போதை காட்சிகள்.
மொத்தத்தில் ஆவேசம் இளைஞர்களுக்கு திரையரங்கில் ஒரு திருவிழா தான்.