தலையில் பொடுகு தொல்லை நீங்க..

by Editor News

தலைமுடி நன்றாக வளர்வதற்காகவும் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பலரும் நிறைய செலவு செய்கிறார்கள். ஆனால் நாம் செலவழிக்கும் பணத்திற்கேற்ற பலன் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

இதற்குப் தீர்வு நம் அருகிலேயே இருக்கிறது. இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நம் முடியை அழகாகவும் பளபளப்பாக மாற்றலாம். உங்கள் முடியை வலுவாக்கும் அந்தப் பொருள் எங்கிருக்கிறது என ரொம்பவும் தேடி அலைய வேண்டாம். நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது. ஆமாங்க, சுத்தமான பால் உங்கள் தலைமுடியின் வடிவத்தை மேம்படுத்தி, மிருதுவாக்கி, சுருள் ஏற்படுவதை குறைக்க உதவுகிறது.

பாலில் புரதங்கள், குறிப்பாக கேசீன் மற்றும் வே போன்றவை அதிகமாக உள்ளது. இந்தப் புரதங்கள் நமது தலைமுடியை அடர்த்தியாக்கவும் பலமாக்கவும் உதவுகிறது. மேலும் புதிய முடிகள் வளர்வதற்கு உதவும் வைட்டமின் டி பாலில் நிறையவே உள்ளது. அதுமட்டுமின்றி முடிகள் உதிர்வதை தடுத்து அதிக முடிகள் வளர்வதை ஊக்குவிக்கும் கால்சியமும் முடிகள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும் வைட்டமின் பி6, பி7, வைட்டமின் இ, பொட்டாசியம் போன்றவையும் பாலில் இருக்கின்றது. தலைமுடிக்கு பாலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது தெரிந்துகொள்வோம்.

பொடுகுத் தொல்லையை குறைக்கிறது… நமது உச்சந்தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க பால் உதவுகிறது. இவை மாய்ஸரைசராக செயல்பட்டு உச்சந்தலை மற்றும் முடியை மேம்படுத்தி புத்துயிர் பெற வைக்கிறது. இதன் மூலம் பொடுகுத் தொல்லையை குறைப்பதில் பால் முக்கிய பங்காற்றுகிறது .

சிறந்த கண்டிஷனர்… உங்கள் தலைமுடி சுருள் சுருளாக இருந்தாலோ, வறண்டு போய் இருந்தாலோ பாலை பயன்படுத்தலாம். பாலில் உள்ள க்ரீம் முடியின் மேற்புறத்தை மிருதுவாக்கி ஈரப்பதமாக்குகிறது. அதோடு பாலில் உள்ள ஊட்டசத்துகள் உச்சந்தலைக்கு நல்ல ஊட்டமளிக்கிறது. உங்கள் தலைமுடி பட்டு போன்று மிருதுவாக இருப்பதற்கு ஒரு சிறந்த கண்டிஷனராக பால் செயல்படுகிறது.

முடி வெடிப்பை குறைக்கிறது.. அதிகப்படியான புற ஊதாக் கதிர்கள் தலையின் மேல் படுவதால் முடிகளின் நிறம் மற்றும் தண்டுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு புரத இழப்பும் காணப்படுகிறது. இதனால் முடிகளில் வெடிப்பு ஏற்படுவதோடு எளிதில் உடைந்து போகின்றன. ஆனால் பால் மற்றும் பால் க்ரீமை தலைமுடியில் அப்ளை செய்வதன் மூலம் முடி வெடிப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்.

ஆண்டி ஆக்ஸிடன்ட் பண்புகள்… பாலில் உள்ள வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை தூண்டுகிறது. ஏனென்றால் வைட்டமின் சி-யில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் உள்ளது. இது நம் தலைமுடியை ஃப்ரீ ரேடிகல்ஸ் காரணமாக வரும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.

தலைமுடியை வலுவாக்குகிறது : பால் பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடியை நேராக மாற்ற முடியாவிட்டாலும், அதன் வடிவத்தை மேம்படுத்தி சுருளை குறைக்க உதவுகிறது. மேலும் பாலில் உள்ள புரதம் உச்சந்தலைக்கும் முடிகளுக்கும் நல்ல ஊட்டம் கொடுத்து, மிருதுவான தலைமுடியை தருகிறது.

முடிகளுக்கு பாலை எப்படி பயன்படுத்தலாம்? முடிகளை பாலைக் கொண்டு நன்றாக கழுவி, ஷாம்பூ போட்டு குளிக்கலாம் அல்லது பாலோடு முட்டை கலந்து மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். அதுவும் இல்லையென்றால் பால் மற்றும் தேன் கலந்து அதை முடியில் அப்ளை செய்யலாம். அதேப்போல் பால், தேன், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை மொத்தமாக கலந்தும் கூட முடியில் அப்ளை செய்யலாம்.

Related Posts

Leave a Comment