பல்வேறு நூற்றாண்டுகளாக மருதாணி தலைமுடிக்கு இயற்கையான ஹேர் டை மற்றும் கண்டிஷனராக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தலை முடிக்கு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கண்டிஷனிங் பலன்களையும் அளிக்கக் கூடியதாக அமைகிறது. எனினும் பிற தலை முடி சிகிச்சையைப் போலவே மருதாணியை பயன்படுத்துவதாலும் ஒரு சில பக்க விளைவுகள் உண்டாக தான் செய்கிறது. குறிப்பாக அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தாவிட்டாலோ அல்லது அதில் ஒரு சில உணர்திறன் கொண்ட பொருட்கள் அமைந்திருந்தாலோ அது உங்களுக்கு கேடு விளைவிக்கலாம். மருதாணியை ஒருவரது தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
அலர்ஜி :
தலைமுடிக்கு மருதாணி பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஒரு முக்கியமான பக்க விளைவு அலர்ஜி. பெரும்பாலான நபர்களுக்கு இது பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் ஒரு சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தலாம். இந்த அலர்ஜி காரணமாக தலையில் அரிப்பு, சிவத்தல், வீக்கம் அல்லது தடிப்பு போன்றவை ஏற்படலாம். மோசமான சூழ்நிலைகளில் இந்த அலர்ஜியானது டெர்மாடிடிஸ் ஏற்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இதுபோன்ற அலர்ஜி ரியாக்ஷன்களை தவிர்ப்பதற்கு தலைமுடி மற்றும் மயிர் கால்கள் முழுவதும் மருதாணியை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது அவசியம்.
வறட்சி மற்றும் எளிதில் உடைந்து போதல் :
மருதாணியில் உலரும் பண்புகள் காணப்படுவதால் அது தலைமுடியை வறண்டு போக செய்து, எளிதில் உடைந்து போவதற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக நீங்கள் அடிக்கடி மருதாணி பயன்படுத்தி வந்தாலோ அல்லது நீண்ட நேரத்திற்கு தலைமுடியில் மருதாணியை விட்டாலோ இது ஏற்படலாம். மருதாணியில் உள்ள சாய மூலக்கூறுகள் தலைமுடியின் இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தை நீக்குகிறது. எனவே மருதாணி பயன்படுத்திய பிறகு உங்கள் தலைமுடியை ஆழமாக கண்டிஷனிங் அல்லது எண்ணெய் சிகிச்சை செய்வது அவசியம்.
நிற வேறுபாடு :
தலைமுடிக்கு மருதாணியை பயன்படுத்திய பிறகு உங்களுக்கு கிடைக்கக்கூடிய நிறமானது நீங்கள் பயன்படுத்திய மருதாணி பொடியின் தரம், எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தினீர்கள் மற்றும் உங்கள் தலைமுடியின் இயற்கையான நிறம் போன்றவற்றை பொறுத்து அமையும். பொதுவாக மருதாணியானது தலைமுடிக்கு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தை சேர்க்கிறது.
மயிர் கால்களில் எரிச்சல் ஒரு சிலர் மருதாணியை பயன்படுத்திய பிறகு மயிர்க்கால்களில் எரிச்சல் அல்லது அசௌகரியத்தை அனுபவித்ததாக கூறுகின்றனர். இதனால் அரிப்பு, எரியும் உணர்வு அல்லது சிவத்தல் போன்றவை ஏற்படலாம். இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரத்திற்கு தலைமுடியில் மருதாணியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட அலர்ஜியின் விளைவாக இந்த மயிர்க்கால்கள் எரிச்சல் உண்டாகலாம். எனவே நீண்ட நேரத்திற்கு மருதாணியை தலைமுடியில் விட வேண்டாம். அப்படி விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
தலைமுடியின் அமைப்பில் மாற்றம் :
நீண்ட நாட்களாக நீங்கள் மருதாணியை தொடர்ந்து தலைமுடியில் பயன்படுத்தி வரும்பொழுது தலை முடியின் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம். மருதாணியில் கண்டிஷனிங் பண்புகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு மருதாணியை வழக்கமான முறையில் பயன்படுத்தியதால் தலைமுடி சொர சொரப்பாகவும், வறண்டதாகவும் மாறிவிடுகிறது. எனவே மருதாணியை பயன்படுத்தும் பொழுது உங்கள் தலைமுடிக்கு ஆழமான கண்டிஷனிங் மற்றும் மாய்சரைசிங் வழக்கத்தை பின்பற்றுவது மிக மிக முக்கியம்.
மருதாணியானது பிரபலமான இயற்கை ஹேர் டை மற்றும் கண்டிஷனராக திகழ்ந்தாலும் அதனால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதையும் ஒருவர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அபாயங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக இந்த விளைவுகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.