உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று. குளிர்ச்சியான தன்மை கொண்ட மணத்தக்காளி கீரை, வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது.
வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லா காலங்களிலும் ஓரளவு கிடைக்கக் கூடியது இது.
மணத்தக்காளி கீரையின் காய், பச்சை மணியைப் போல இருப்பதால், மணித்தக்காளி என்றும் அழைப்பார்கள். இதன் பழம் மிளகு போல உள்ளதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும்.
மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படும். கொஞ்சம் கசப்புத்தன்மை கொண்டதாகும் இக்கீரை. மணத்தக்காளி கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவைதான். இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாது உப்புகள் நிறைந்துள்ளன. இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.