ஒரு சவரன் தங்கம் அரை லட்சம்!

by Editor News

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உலோகங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானதாக இந்தியர்கள் கருதுவது தங்கத்தைத் தான். இந்தியர்களின் வீடுகளில் நடைபெறும் ஒவ்வொரு விஷேசங்களிலும், பண்டிகை கொண்டாட்டங்களிலும் முக்கிய இடம் பிடிப்பது தங்கம்.

தங்க நகைகளை வைத்து ஒருவரின் பொருளாதார நிலையும் மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள், பல்வேறு நாடுகளுக்கிடையே மூளும் போர்கள், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால், கடந்த சில நாட்களாக தடாலடியாக உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை.

அத்துடன், அமெரிக்காவின் பொருளாதாரத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதைப் போன்று பல்வேறு காரணங்களால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் ஆபரத் தங்கத்தின் விலை 3500 ரூபாய்க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6250 ரூபாய்க்கும், ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், திருமணம் உள்ளிட்ட தேவைகளை நடத்த முடியவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆனால், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் தங்கத்தின் தேவை ஆகியவற்றால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என்கிறார்கள் தங்க நகை விற்பனையாளர்கள்.

இதனிடையே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதோடு, ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே, பெண் பிள்ளைகளை வைத்துள்ள நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நகைகளை வாங்க முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment