நெடுந்தூர புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முழுமையாக ஒன்லைன் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்படி, இன்று இரவு 7 மணி முதல் புகையிரத ஆசனங்களை இணையம் ஊடாக முன்பதிவு செய்ய முடியும் என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆசனங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கையின் போது இதுவரையான காலப்பகுதியில் இணையம் மூலம் பதிவு செய்வதற்கு 40 சதவீத இட ஒதுக்கீடு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று முதல் முழுமையாக இணையம் மூலம் மாத்திரம் நெடுந்தூர பயண புகையிரத ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படும் என புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், துன்ஹிந்த ஒடிஸி என்ற புதிய ரயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரதம் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
முன்னதாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், எல்ல ஒடிஸி மற்றும் சீதாவாக ஒடிஸி என்ற பெயரில் இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.