ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முன்னேற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு நாடுகள் பெண்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. பெண்களுக்கான திட்டங்கள், சலுகைகள் என ஊக்கப்படுத்தி வருகின்றன.
அவ்வாறு இந்திய அரசு பெண்களுக்காக கொண்டு வந்த திட்டம் தான் “ஸ்டாண்ட் அப் இந்தியா”. தொழில்முனைவோராக மாற விரும்பும் எஸ்டி, எஸ்சி பிரிவை சேர்ந்த பெண்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனளிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் செய்யும் பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை சுமார் ரூ.43,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கடன் வாங்கும் பட்சத்தில், கடன் வாங்கிய அடுத்த 18 மாதங்கள் வரை கடன் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட 18 மாத காலத்தில் தொழிலை மேம்படுத்தும் விதமாக அவகாசம் வழங்கப்படுகிறது.