தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்பவர் நடிகர் விஜய். அவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி முழு நேரமாக மக்கள் பணியாற்ற, அரசியல் கட்சி ஒன்றை சமீபத்தில் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிடப்பட்ட அந்தக் கட்சியின் நிர்வாக குழுவுடன் இணைந்து கட்சிக்கான பல செயல்முறை திட்டங்களை தீட்டி வருகிறார்.
கட்சி தொடங்கும் பொழுது, நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியின் சின்னம் மற்றும் கொடி தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பின்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் த.வெ.க கட்சியினர். தமிழகத்தில் 6.2 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், கட்சியில் குறைந்தது 2 கோடி உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும் என்று மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் த.வெ.க கட்சியில் மக்கள் இணைவதற்கான செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில் உள்ள உறுப்பினர் படிவத்தை நிரப்புவதன் மூலம் மக்கள் அக்கட்சியில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் முதல் ஆளாக நடிகர் விஜய் இணையும் புகைப்படமும், வீடியோவும், நிகழ்ச்சியின் போது வெளியிடப்படும் என்று தகவல் கசிந்துள்ளது.