மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் திரிஷ்யம். சாமானிய மனிதன் தன்னுடைய மகள் செய்த கொலையை மறைக்க, திரைப்படங்களை பார்த்து அதை தன்னுடைய வாழ்க்கையிலும் நடைமுறை படுத்தி, எப்படி தடையங்களை அழித்து மகளையும் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் முதல் பாகத்தில் கூறிய இயக்குனர் ஜீத்து ஜோசப், இதே படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகத்தையும் இயக்கி இருந்தார்.
பிரமாண்ட பட்ஜெட் எல்லாம் செலவு செய்யாமல், வெறும் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக சுமார் 72 கோடி வரை வசூல் செய்து, ஒட்டுமொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது.
மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதே போல் சிங்களம், சைனீஸ், இந்தோனேசியா மற்றும் கொரியன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து திரிஷ்யம் படத்தை ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்ய இருப்பதாக தற்போது அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் ‘த்ரிஷ்யம்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், இதன் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஹோலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்கிற பெருமையையும் த்ரிஷ்யம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.