இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்குமாறு, இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் மீண்டும் இன்று கடற்றொழிலுக்குச் சென்றுள்ளதாக தமிழ் நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்குமாறு, இராமேஸ்வரம் மீனவர்களால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை இடைநிறுத்;தி இன்று மீண்டும் கடற்றொழிக்குச் சென்றுள்ளதாக தமிழ்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 10 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற தங்கச்சிமடம், பேருந்து நிலைய வளாகத்திற்கு வருகைத் தந்த, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்திருந்தார்.
மேலும், தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அவர் வாக்குறுதி அளித்த நிலையிலேயே மீனவர்கள் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
போராட்டம் இடைநிறுத்தப்பட்டமையால் ராமேஸ்வரம் மீனவர்களின், சுமார் 300 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்றமையும் குறிப்பிடத்தக்கது.