மாசி மகம் நாளில் சிவனையும், மகாவிஷ்ணுவையும், பித்ருக்களையும் வழிபட்டால் ஏழு ஜென்ம தோஷங்கள் அகன்று எல்லா விதமான நன்மைகளையும் ஒன்றாகப் பெற்று செழுமையான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு புண்ணியம் வாய்ந்த இந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24ம் தேதியான இன்று (சனிக்கிழமை) வழிபாட்டை அதிகாலையில் எழுந்து விரதம் இருந்து பலர் தொடங்கிருப்பார்கள்.. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை உள்ளது.
இதனால் பிப்ரவரி 24ம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புனித நீராடலாம். புனித நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து, சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதாலும் ஏழு தலைமுறை பாவம் தீரும் என்பது ஐதீகம்..
மாசி மகம் மகத்துவம் :
இறைவழிபாட்டிற்கு ஏற்ற மாதமான மாசியில் வரும், இந்த நாளில் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய முப்பெரும் கடவுளுக்கும் வழிபாடு செய்யலாம். இந்த நன்னாளில் அவர்களை வணங்கும்போது தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. இன்றைய தினம் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பாவங்களை போக்கி இறைவனின் அருளை பெற்று தரும் என்பது ஐதீகம்.
தீர்த்தவாரி :
இந்த நன்னாளில் பல ஆலயங்களில் உற்சவ மூர்த்தியுடன் பக்தர்களும் நீர்நிலைகளில் நீராடி வழிபாடு நடத்துகின்ற தீர்த்தவாரி நடைபெறும். வெறும் புனித நீராடல், வழிபாடு என நிறுத்திவிடாமல் சில தான தர்மங்களையும் செய்வோருக்கு பாவங்கள் விலகி நன்மைகள் கிடைப்பது உறுதி.
அன்னதானம் :
அன்னதானத்தின் மகத்துவத்தை உணர்த்துவதே மாசி மகம் என்பதால், இன்று முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னமிடுங்கள். இதனால் முடிவில்லா நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். போதும் என்ற மனம் அன்னதானம் கொடுக்கும்போதும் பெறும் போதும் மட்டுமே தோன்றும். அதனாலேயே தானத்தில் சிறந்ததாக அன்னதானம் கருதப்படுகிறது.