இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோகிராம் வரையான பயணப் பொதிக் கட்டணத்தை இலவசமாக வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.