கல்யாண வீட்டு வத்த குழம்பு ரெசிபி…

by Editor News

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 2

பூண்டு – 25

சுண்டக்காய் வத்தல் – 3 டேபிள் ஸ்பூன்

மணத்தக்காளி வத்தல் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

சிகப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

குழம்பு தூள் – 4 டேபிள் ஸ்பூன்

புளி – எலும்பிச்சை அளவு

தேங்காய் பால் – 3/4 கப்

நல்லெண்ணெய் – 3 1/2 டேபிள் ஸ்பூன்

செக்கு நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காய கட்டி – 2 சிறிய துண்டுகள்

வெல்லம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் எடுத்து வைத்துள்ள புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சுண்டக்காய் மற்றும் மணத்தக்காளி வத்தலை போட்டு நன்றாகக சிவந்து வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

போதுமான அளவு சிவந்து பொரிந்த வத்தலை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறியவுடன் அதிலிருந்து சிறிதளவு எடுத்து அதை ஒன்னும் பாதியுமாக பொடித்து எடுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அதே எண்ணெய்யில் கடுகு, சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொரித்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் கட்டி பெருங்காயத்தை சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

அனைத்தும் நன்றாக பொரிந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் பூண்டை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு கலந்து கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைந்து மென்மையாக வதங்கியவுடன் குழம்பு தூள் மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை மாறி எண்ணெய் பிரியும் தருவாயில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து கலந்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

குழம்பு நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து கிளறி 15 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வைத்து கொதிக்கவிடவும்.

குழம்பு நன்றாக கொதித்து ஓரளவிற்கு திக்கான பதத்தில் எண்ணெய் பிரிந்துவரும் தருவாயில் ஏற்கனவே நாம் வறுத்து வைத்துள்ள வத்தலையும், பொடித்து வைத்துள்ள வத்தலையும் போட்டு கலந்து விட்டுக்கொள்ளவும்.

அடுத்து சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடங்களுக்கு மூடி போட்டு சமைக்கவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பார்த்தால் வத்த குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து சரியான பதத்தில் இருக்கும்.

தற்போது அடுப்பை அணைத்து தயாரான வத்த குழம்பில் செக்கில் ஆட்டிய 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான கல்யாண வீட்டு வத்த குழம்பு ரெடி…

Related Posts

Leave a Comment