உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். அதாவது ரோஸ் தினத்துடன் தொடங்கி முத்த தினத்துடன் காதலர் வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 7, ரோஸ் தினம் என்றும், பிப்ரவரி 8 காதலை சொல்லும் தினம் என்றும், பிப்ரவரி 9 சாக்லேட் தினம் எனவும், பிப்ரவரி 10 டெடி தினம் என்றும், பிப்ரவரி 11 பிராமிஸ் தினம் எனவும், பிப்ரவரி 12, கட்டிப்பிடி நாள் என்றும், பிப்ரவரி 13 முத்த தினம் என்றும் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது.
இந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், காதலர் தினம் தான் காதலர்களுக்க்கு மிகவும் ஸ்பெஷலான தினம். தங்களின் பிரிக்க முடியாத பிணைப்பு, பரஸ்பரம் கொண்டிருக்கும் விலைமதிப்பற்ற காதலை வெளிப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி இந்த காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர். காதலர்கள் மட்டுமின்றி திருமணமான தம்பதிகளும் இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். எனவே, காதலர் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்ன? பிப்ரவரி 14 அன்று ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காதலர் தினம் எப்படி உருவானது என்பது பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.அதில் பிரபலமான ஒரு கதையின் படி பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெற்ற லூபர்காலியா என்ற ரோமானிய திருவிழாவிலிருந்து காதலர் தினம் உருவானது என்று கூறப்படுகிறது. வசந்த காலத்தின் துவக்கத்தில் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவில் லாட்டரி மூலம் பெண்கள் ஆண்களுக்கு ஜோடியாக இணைக்கப்பட்டனர். இந்த பண்டிகையை காதலர் தினமாக மாற்றியவர் போப் கெலாசியஸ் I. இருப்பினும், 14 ஆம் நூற்றாண்டு வரை காதலர் தினம் காதல் தினமாக கொண்டாடப்படவில்லை.
காதலர் தினம் எப்படி தோன்றியது என்பது குறித்து மற்றொரு கதையும் கூறப்படுகிறது. பாதிரியாராக இருந்த புனித வாலண்டைன் நினைவாக காதலர் தினம் பெயரிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கிளாடியுஸ் மன்னன் ரோம் நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் பாதிரியாராக இருந்த வாலண்டைன் பல ஜோடிகளுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தாகவும், இதை அறிந்த மன்னர் அவருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து கொடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாள் தான் பிப்ரவரி 14. எனவே அவரின் நினைவாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, செய்திகளை அனுப்பும் நடைமுறை 1500களில் தோன்றியது மற்றும் 1700களின் பிற்பகுதியில் வணிக ரீதியாக அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், இப்போது பொம்மைகள், சாக்லேட்டுகள், பூக்கள் மற்றும் பாரம்பரிய கடிதங்களும் காதலர் தின பரிசுகளாக கொடுக்கப்படுகின்றன..