சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டு
நிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தி
யுரைத்த வனாம முணர வல்லார்க்குப்
புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.
விளக்கம்:
பாடல் 1773 இல் உள்ளபடி பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும் அவை அனைத்தையும் தாண்டியும் அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாக பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக் கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனை தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, எங்கும் பொய்த்து போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான் கயிறு போல் திரிந்த சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்.