தமிழகத்தில் காலம் காலமாக நியூஸ் பேப்பரில் சூடான பஜ்ஜி போண்டாவை வைத்து விற்பனை செய்து வருவது பல கடைகளில் வழக்கமாக இருந்து வரும் நிலையில் இனிமேல் நியூஸ் பேப்பரில் பஜ்ஜி போண்டா போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று உணவகங்கள் டீக்கடைகள் தள்ளுவண்டி கடைகளில் பழைய செய்தி தாள் மற்றும் காகிதத்தில் உணவு பொருட்களை பார்சல் செய்து மக்களுக்கு தரக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் மீறி உணவு பொருள்களை நியூஸ் பேப்பரில் தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நியூஸ் பேப்பரில் பார்சல் செய்து தருவதால் அதில் உள்ள வேதிப்பொருள்கள் புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் அபாயமும் இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.