தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் – 150 கிராம்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காய தூள் – சிறிதளவு
கருவேப்பிலை – 3 கொத்து
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இரண்டாய் கட்செய்த பச்சை மிளகாய் சேர்த்து அதன் பச்சை தன்மை நீங்கி வெள்ளையாக மாறும் வரை எண்ணெய்யில் வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் கலர் மாறும்வரை நன்கு வதக்கி அதனுடன் மெல்லிசாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்கு குலைந்து வதங்கியவுடன் பொடிப்பொடியாக நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக எண்ணெய்யில் வதக்கிக்கொள்ளவும்.
குறிப்பு : இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது.
பிறகு இவற்றை மூடிபோட்டு ஒரு 10 நிமிடங்களுக்கு வேகவிட்டுக்கொள்ளவும்.
குறிப்பு : இடைஇடையே மறக்காமல் கிளறி கொள்ளுங்கள்.
கத்திரிக்காய் நன்றாக மசிந்து வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் வதக்கி ஒரு 3 நிமிடங்களுக்கு மூடிபோட்டு வேக விட்டுக்கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கலந்துவிடுங்கள்.
தற்போது அடுப்பை அணைத்து சட்னியை நன்றாக ஆறவிடவும்.
இது முழுதும் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து சிவந்ததும் சிறிதளவு பெருங்காய தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அனைத்தும் பொரிந்த பிறகு அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
சுவைமிகுந்த ‘கத்திரிக்காய் சட்னி’ தயார்…