தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு
பெரிய வாழைப்பழம் – 1
நுனுக்கிய வெல்லம் – 1 கப்
ஏலக்காய் – 1/4 ஸ்பூன்
எள் – 1 ஸ்பூன்
முந்திரி – தேவைக்கேற்ப
தேங்காய் – பொடியாக நறுக்கியது
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்
செய்முறை :
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 கப் அளவிற்கு நுனுக்கி வைத்துள்ள வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு வெல்லத்தை காய்ச்ச எந்த கப்பில் வெல்லம் எடுத்தோமோ அதே கப்பில் அரை கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து வெல்லத்துடன் சேர்த்து பாகு காய்ச்சவும்.
குறிப்பு : வெல்லம் நீரில் கரைந்தால் போதுமானது. கம்பி பதத்திற்கு தேவையில்லை.
குறிப்பு : வெல்லத்திற்கு பதிலான சர்க்கரை, நாட்டு சர்க்கரை, கருப்பட்டடி என விருப்பத்திற்கு ஏற்ப ஆரோக்கியமாக சேர்த்து கொள்ளலாம்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய வாழைப்பழத்தை தோலுரித்து சேர்த்து மசித்து கொள்ளுங்கள்.
குறிப்பு : சிறிய பழம் என்றால் இரண்டு சேர்த்து கொள்ளலாம்.
பிறகு மசித்த வாழைப்பழத்துடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து அதனுடன் காய்ச்சி வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து கெட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சமாக நெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் தேவைக்கேற்ப முந்திரி பருப்பையும் சேர்த்து நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
குறிப்பு : விருப்பமுள்ளவர்கள் அதில் ஒரு ஸ்பூன் எள்ளை சேர்த்து கொள்ளலாம்.
நெய்யில் வறுத்து எடுத்த அனைத்தையும் பணியார மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.
தற்போது அடுப்பில் பணியார கல்லை வைத்து சூடானதும் அதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப எண்ணெய் அல்லது நெய்யை விட்டு கலந்து வைத்துள்ள மாவை கொண்டு பணியாரமாக ஊற்றி கொள்ளுங்கள்.
முக்கியமாக அடுப்பை மிதமான தீயில் வைத்து பணியாரத்தை வேக விட வேண்டும். அப்போதுதான் பணியாரம் கருகாமல் பொன்னிறமாக நன்கு வேகும்.
பணியாரம் ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் ஆரோக்கியம் மிகுந்த சுவையான பணியாரம் ரெடி…