கேரள மாநிலம் மூணாறில் தற்போது குளிர்கால சீசனாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இதனால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மூணாறை எத்தனை வார்த்தைகளால் வர்ணித்தாலும் தென்னகத்தின் காஷ்மீர் என வர்ணிப்பதற்கு இணையாக மற்றவை இருக்காது. அந்த அளவுக்கு காஷ்மீரைப் போன்ற இயற்கைசூழ் நகரமாகத் திகழ்கிறது.
மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும்.
மூணாறு. குண்டலை, நல்ல தண்ணி, முத்தரப்புழை என்ற 3 ஆறுகள் சங்கமிக்கும் ஆறு என்பதால், அந்த ஊருக்கு மூணாறு என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
காடாக இருந்த இந்தப் பகுதிக்கு முதன்முதலாக வந்த ஜான் முன்ரே டேவிட் என்ற ஆங்கிலேயரின் பெயரில் இருக்கும் முன்ரே என்ற வார்த்தை மறுவி மூணாறு என்றானது என்கிறது ஒரு தரப்பு. இதற்கு மேல் வரலாற்றை ஆராயாமல், ஜாலியாகச் சுற்றிப்பார்க்க மூணாறில் என்னென்ன இடங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
அழிந்துவரும் இனமான வரையாடுகளை பார்க்க வேண்டுமானால் மூணாறுக்கு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு செல்ல வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள இந்த பூங்கா ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. பூங்காவில் உள்ள வரையாடுகளை காண சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர்.
இதற்காகவே அனுமதிக்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டும் தான் சுற்றுலா பயணிகள் சென்று வர வேண்டும். இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ளது ஆனைமுடி சிகரம். தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரம் இதுதான்.
2700 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும். இங்கு அபூர்வ இன பிராணிகள், பாம்புகள், பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை செடிகள் உள்ளன. மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ளது மாட்டுப்பெட்டி அணைக்கட்டு.
இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்கட்டை சுற்றி பார்ப்பது மட்டுமின்றி அணைக்கட்டில் படகு சவாரியும் செய்ய்யலாம். மேலும் படகு சவாரியின்போது சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் யூக்காலி மரங்களை காண்பதோடு காட்டு யானை மற்றும் காட்டு எருமைகளை கூட்ட்டம் கூட்டமாக காணலாம்.
மேலும், மாட்டுப்பட்டி கால்நடைப் பண்ணை, டாப் ஸ்டேஷன், தேயிலைக் கண்காட்சி, மரையூர் சந்தனக் காடுகள், குண்டலா ஏரி, அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, மலர் பூங்கா, சின்னாரு வனவிலங்கு சரணாலயம், லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை மூணாறில் பார்த்துப் பரவசம் அடைய வேண்டிய முக்கிய இடங்களாக உள்ளது.
அம்மாநில அரசு பஸ் போக்குவரத்து கழகம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றி, இதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது. இதன்படி, மூணாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பயனின்றி கிடக்கும் அரசு பஸ்களை தங்கும் இடமாகவும், ஓட்டல்களாகவும் மாற்றி, சுற்றுலாப் பயணிகளை கவரும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டம், மூணாறில் பச்சை பசேல் என கண்களைக் கவரும் தேயிலை தோட்டங்கள், மலைகளை தழுவும் மேகக் கூட்டங்கள், தாலாட்டும் மழையின் ஓசை, சில்லுன்னு வீசும் குளிர்ந்த காற்று ஆகியவற்றை ரசித்தவாறு, அம்மாநில அரசு பஸ்சில் செல்லும் ஒரு இன்பச் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.300 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் மூணாறு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை ரசிக்கலாம்.
இதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மூணாறு அம்மாநில அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து காலை 9 மணிக்கு துவங்கும் இந்த பயணம் மாலை 5 மணிக்கு மூணாறு நகரை மீண்டும் வந்தடையும். மூணாறில் இருந்து மாட்டுப்பெட்டி, குண்டளை எக்கோ பாயிண்ட், குண்டளை அணைக்கட்டு, டாப் ஸ்டேஷன், தேயிலை அருங்காட்சியகம் வரை செல்லலாம்.
அதேபோல் மூணாறில் இருந்து கேப் சாலை வழியாக பயணித்து ஆனையிறங்கல் அணைக்கட்டு, மலைக்கள்ளன் குகை, ஆரஞ்சு தோப்பு, ஸ்பைசஸ் தோட்டம் விசிட், பூப்பாறை, சதுரங்கப்பாறை ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் அழகை ரசிக்கலாம். ஒரு வண்டியில் 50 பேர் வரை பயணம் செய்யலாம்.
ஒரே நாளில் 9 இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து ஒவ்வொரு இடத்திலும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி வரை பொழுது போக்கலாம்.