இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 8 ஆம் திகதி பிரித்தானியா சென்ற ராஜ்நாத் சிங் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தியிருந்தார்.
அதன்பின்னர் அந்நாட்டின் இராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் ஆகியோரைச் சந்தித்த ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்நிலையிலேயே பிரிதமர் ரிஷி சுனக்கையும் ராஜ்நாத் சிங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் பிரித்தானியா செல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.