திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாசுரங்கள் – 26

by Editor News

திருப்பாவை பாசுரம் – 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள் விளக்கம்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீல நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் என்று பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருஷேத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.

திருப்பள்ளி எழுச்சி பாசுரம் – 6

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

பாடல் விளக்கம்:

உமையின் மணாளனே, குளிர்பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் சிவனே, பரபரப்பான இந்த உலகின் சிந்தனையின்றி, பற்று, பாசங்களை விட்டு விட்டு உன்னை மட்டுமே சிந்திக்கின்ற ஞானியர் பலரும், உன்னிடம் அன்பு காட்டுவதே கடமை என கருதும் மைக்கண்ணியர் பலரும் உன்னை வணங்கி நிற்கிறார்கள். நாங்கள் சாதாரணமானவர்கள். உன்னை வணங்கியே ஆக வேண்டும் என்பதற்காக வணங்க வரவில்லை. எங்களை ஆட்கொண்டு, பிறவி வேரை அறுத்து பூமியில் மீண்டும் பிறக்காமல் காத்தருள்வாய் என்று பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

Related Posts

Leave a Comment