மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை உடன் மூல நட்சத்திரம் வரும் நாளில் அனுமன் அவதரித்ததாக இந்து புராணங்கள் கூறுகின்றன. அதன்படி ஜனவரி 10-ம் தேதி மாலை மூல நட்சத்திரம் வருகிறது. ஜனவரி 11-ம் தேதி அமாவாசை தினமாகும். எனவே தமிழ்நாட்டில் நாளை ஜனவரி 11 அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த அனுமன் ஜெயந்தியில் வெற்றிலையும், வெண்ணையும் சாற்றி வழிபட்டால் கடன்கள் தீர்ந்து வாழ்வில் வளமும் வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கேசரி என்ற வானர அரசனுக்கும் அஞ்சனை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர் தான் ஆஞ்சநேயர். துணிச்சல், பலம், வீரம், அறிவு, ஆரோக்கியம் ஆகியவற்றை கொண்டவரும், ஸ்ரீராமரின் பக்தருமான ஆஞ்சநேயர் பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒருங்கே பெற்றவராக அவதரித்தவர்.
எவராலும் செய்ய முடியாத அசாத்திய செயல்களை கூட அநாசியமாக செய்து முடிக்க கூடியவர். இறைவனிடம் எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்று கற்று கொடுத்தவர். தன்னுடைய உண்மையான பக்தியால் அந்த கடவுளையே பிரமிக்க செய்தவர்.
அனுமனை வழிபட்டால் துன்பங்கள், தொல்லைகள் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்பது ஐதீகம். அனுமன் பக்தர்கள் வெண்ணெய் காப்பு செய்தும், வெற்றிலை மாலை அணிவித்தும் வழிபட்டு வருகின்றனர். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயர் சீதையை தேடி அலைந்த போது அவரை இலங்கையின் அசோகவனத்தில் சிம்சுகா மரத்தடியில் சோகமாக உருவாக அமந்திருந்ததை கண்டு கலங்கினார் அனுமன்.
அப்போது தான் ஸ்ரீராமரின் பக்தன் என்பதையும் அவரின் தூதுவனாக வந்திருப்பதையும் விவரித்தார். மேலும் ஸ்ரீராமன் கொடுத்த கணையாழியை சீதா தேவியிடம் கொடுத்து அவரிடம் சூடாமணியை பெற்றுக்கொண்டார். பின்னர் சீதையிடம் விடை பெற்று கிளம்பும் போது அவரிடம் ஆசீர்வாதம் பெற எண்ணினார் அனுமன். ஆனால் அவரை ஆசீர்வதிக்க அட்சதையோ புஷ்பங்களோ கிடைக்கவில்லை. அங்கு வெற்றிலை கொடி படர்ந்திருந்ததை கண்ட ஆஞ்சநேயர், சில வெற்றிலை பறித்து மாலையாக கோர்த்து தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதையிடம் பணிந்து வேண்டினார்.
ஆஞ்சநேயரின் இந்த சமயோஜித புத்தியை பார்த்து மகிழ்ந்த சீதை, அந்த வெற்றிலை மாலையை ஆஞ்சநேயரின் கழுத்தில் அணிவித்து என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தார். இதன் காரணமாக ஆஞ்சநேய பக்தர்கள் அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதாக கூறப்படுகிறது.
பகவான் கிருஷ்ணருக்கு எப்படி வெண்ணெய் பிடிக்குமோ அதே போல் ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய் பிடித்தமான ஒன்று. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இலங்கை முழுவதும் ஆஞ்சநேயர் சீதையை தேடி அலைந்து கொண்டிருந்த போது ராவணனின் வீரர்கள் பல தடைகளை கொடுத்தனர். அவர்கள் வைத்த நெருப்பு ஆஞ்சநேயரை ஒன்றும் செய்யவில்லை ஆனால் வெப்பத்தின் தாக்கத்தால் அவரின் உடல் சூடானது.
ராவணனை எதிர்த்து ஸ்ரீராமரும், லட்சுமணனும் போரிட்ட போது ஆஞ்சநேயரும் தனது வானர படையுடன் போரிட்டார். அப்போது ராவணனின் வீரர்கள் அவர் மீது பல கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் காயங்கள் உண்டானது. ஆனால் இந்த காயங்களை ஆஞ்சநேயர் கண்டுகொள்ளவே இல்லை.
எனினும் போரில் ராவணனை கொன்று, சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் இருவரையும் பணிந்து வணங்கினார். அப்போது ஆஞ்சநேயரின் உடலில் இருந்த காயங்களை பார்த்து பதறிய சீதை, அவரின் உடல் முழுவதும் வெண்ணெயை பூசிவிட்டார். இதனால் அவரின் உடலில் இருந்த காயங்கள் மறைந்ததுடன், அவரின் உடலில் இருந்த வெக்கையும் தணிந்தது.
சீதா தேவியின் செயலால் மனம் மகிழ்ந்த அஞ்சநேயர், தனக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவர்களின் நோயையும், ராமரின் அருளால் முழுமையாக குணப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். இதன் காரணமாகவே அனுமன் பக்தர்கள் அவருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகின்றனர்.
எனவே அனுமன் ஜெயந்தி அன்று வெண்ணையும், வெற்றிலை மாலையும் சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடைபெறும். கடன்கள் நீங்கி, வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.