10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 11ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பொது தேர்வானது மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதியே பொது தேர்வு தொடங்கும் நிலையில் 22 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதேசமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 10ம் தேதி தேர்வு முடிவுகளும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முடிவடைகிறது. 11ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைகிறது. 12ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் ஆனது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.