பிரசவத்திற்கு பிந்தைய நிலையில் பெண்களின் வயிறு பெரியதாக தொப்பை விழுந்ததைப் போல காணப்படுகிறது. இதனை மருத்துவ ரீதியாக Diastasis Recti என்று குறிப்பிடுகின்றனர். பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதி தசைகள் இரண்டு கூறுகளாக பிரிந்து காட்சியளிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும், புதிய தாய்மார்களுக்கும் இதுபோன்று வயிறு காட்சியளிப்பது இயல்பான விஷயம் தான்.
அதிலும் 35 வயதை எட்டிய பெண்கள், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களுக்கு இதுபோல வயிறு பெரியதாக காட்சியளிப்பதில் வியப்பு ஏதும் இருக்க முடியாது. கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப பெண்களின் கர்ப்பப்பை விரிவடைகிறது.
மேலும் வயிற்றுப் பகுதி தசைகளும் விரிவடைந்து, அதனுடன் தொடர்பில் இருக்கும் திசுக்களும் விரிவடைகின்றன. திசுக்கள் விரிவடைந்து, மேலும் விரிவடைந்து குழந்தை பிறந்த பிறகு வெளியே தள்ளப்படுகிறது. இத்தகைய சமயத்தில் 2 செ.மீ. அளவுக்கு வயிற்றில் மடிப்பு விழுந்து இடைவெளி காணப்படுவது இயல்புதான்.
ஆனால், இதற்கு மீறிய அளவில் இடைவெளி காணப்பட்டால் அதற்கு முறையான பயிற்சியின் மூலமாக தீர்வு காண வேண்டும். வயிற்றுப் பகுதி திசுவானது எளாஸ்டிக் தன்மை கொண்ட ரப்பர் போல அமைந்திருக்கும். இது மீண்டும் சுருங்கி வரக் கூடியது. ஆனால், கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின்போது இந்த திசு அதிகப்படியாக விரிவடைந்த காரணத்தால் அங்கு ஏற்படக் கூடிய இடைவெளி உடனடியாக மறையாது.
இதனால், தொப்புளுக்கு வெளியே தள்ளியபடி தொப்பை காட்சியளிக்கத் தொடங்கும். பிரசவத்திற்கு பின் சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரையிலும் கூட இந்த நிலை நீடிக்கலாம். பொதுவாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் இதுபோன்று வயிறு விரிவடையும்.
10ல் 3 பெண்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும். சிலருக்கு பிரசவத்திற்கு பின் 6 அல்லது 8 மாதங்கள் கழித்து இதுபோன்ற நிலை காணப்படும். எனினும், இதுகுறித்த தவறான புரிதல்கள் பலருக்கும் உண்டு. அவை குறித்து இப்போது பார்க்கலாம்.
பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக தொப்பை விழுகிறது என்ற சிந்தனை பலருக்கு உள்ளது. ஆனால், தசைகளின் இடைவெளி மட்டுமே. இந்த சமயத்தில் கனமான பொருள்களை தூக்க முடியாது மற்றும் இடுப்பு, தொடை வலி இருக்கும். தாம்பத்ய உறவின்போது வலி ஏற்படும்.
பிரசவகால தொப்பை மறையாது என்ற கண்ணோட்டம் தவறானது. முறையான சிகிச்சை மற்றும் பயிற்சியின் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
பிரசவத்திற்கு பின் 5 ஆண்டுகள் கடந்துவிட்டால் இதற்கு தீர்வு காண முடியாது என்பது தவறு. எந்த சமயத்திலும் இதற்கு தீர்வு காண முடியும்.
ஏரோபிக் பயிற்சிகளால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், மூச்சுப்பயிற்சி, இடுப்பு பயிற்சி போன்றவற்றின் மூலமாக தீர்வு காண முடியும்.