ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் செல்லும்:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மே மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
தமிழகம் vs தமிழ்நாடு:
தமிழ்நாடு என்ற சொல்லை விட தமிழகம் தான் சரியானது என்ற கருத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல் அவர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளிலும் அவர் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என பயன்படுத்தினார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர்.
பங்காரு அடிகளார் மறைவு:
மேல்மருவத்தூர் கோயிலில் இருக்கும் கருவறையில் பெண்கள் பூஜை செய்யலாம் என அனுமதி வழங்கி ஆன்மீக உலகில் மாற்றத்தை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். இவர் அக்டோபர் 19 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசு 21 குண்டுகள் முழங்க அரசு மறியாதை செலுத்தப்பட்டது.
செந்தில் பாலாஜி முதல் பொன்முடி வரை:
தமிழ்நாடு அரசியலை உளுக்கிய வழக்குகள். மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் பிணைக்கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் தற்போது வரை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என உயர்நீதிமன்றம் தரப்பில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், 3 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்:
அரசு பள்ளிளுக்குத் தொலைத் தூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 2022 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2023 ஆகஸ்ட் 25இல் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்:
டிசம்பர் மாதம் என்றாலே பேரிடர் மாதம் என மக்கள் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது. சுனாமி, 2015 வெள்ளம் என அடிமேல் அடி விழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக சுமார் 40 செ.மீ அளவு மழை பதிவானது இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது, ஏராளமான மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் :
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காசா நகரம் உருக்குலைந்துள்ளது. 2.3 மில்லியன் மக்களை இடம்பெயர்ந்துள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 100 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போர் இன்னும் முடிந்தபாடில்லை.
ஹிஜாப் சர்ச்சை :
கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிப்ரவரி 5ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாபுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஹிஜாபுக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் அணிய தடை விதித்த அரசாணை செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்..!
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
“பிளெய்ன்” மழை:
இதை பிளெய்ன் மழை என்பார்கள். அதாவது மலை பகுதியில் இல்லாமல் நிலப்பகுதியில் பெய்யும் அதீத மழை. 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாகி உள்ளது. இது அவர்கள் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் பெய்யும் மழையாகும். அது ஒரே நாளில் பெய்துள்ளது. இது போன்ற மழை எல்லாம் மலை பிரதேசத்தில்தான் பெய்யும். ஆனால் இந்த முறை சாதாரண சமதள பகுதியான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்துள்ளது. குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மேலே இருக்கும் மழை மேகங்கள் இதில் பதிவாகி உள்ளன.
விஜயகாந்த் மறைவு :
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர், விஜயகாந்த். சினிமாவைத்தாண்டி மக்கள் பணியிலும் ஆர்வம் காட்டிய இவர், தேமுதிக கட்சியின் தலைவராக விளங்கினார்.“கேப்டனின் கதாப்பாத்திரங்களும் அவற்றை அவர் நடித்த விதமும் சாதாரண குடிமகனின் போராட்டங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டுகிறது”
விஜயகாந்தின் 100வது படம், ‘கேப்டன் பிரபாகரன்’. 1991ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த், தமிழ்நாடு வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இவரது கதாப்பாத்திரம், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரும் தமிழ் ஈழ போராளியுமான வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து எழுதப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த், எப்போதும் போல சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். படமும், மாபெறும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இருந்து நடிகர் விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்ற பெயர் மக்களால் கொடுக்கப்பட்டது (Captain Vijayakanth). காவலதிகாரியாகவோ, இந்திய ராணுவத்தை சேர்ந்தவராகவோ இல்லாத ஒரு நடிகரை ஏன் அனைவரும் கேப்டனாக அழைக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவாக இருந்த போது எழுப்பப்பட்டன. ஆனால், அவையனைத்தும் விஜயகாந்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவால் கண்டு கொள்ளப்படாமல் போயின.