வீடுகளின் மூலை இடுக்குகளில், சமையலறை, படுக்கை அறை, கதவுகள், உணவுகளில் எளிதாக எறும்புகள் வந்துவிடும். குளிர்காலம், மழைக்காலம் மற்றும் வெயில் காலம் வந்தாலும் எறும்புகளுக்கு மட்டும் ஓய்வே இருக்காது.
எறும்புகள் உங்களைக் கடிப்பதுடன் மட்டுமில்லாமல், நீங்கள் சமைத்து வைத்த உணவுகளிலும் சென்றுவிடுகிறது. குறிப்பாக இனிப்பு வைத்திருக்கும் இடங்களில் மற்றும் சர்க்கரை டப்பாவில் கண்டிப்பாக எறும்பு புகுந்துவிடும்.
நீங்கள் எப்படி மறைந்து வைத்தாலும் எறும்பிடமிருந்து உங்களால் தப்பிக்க முடியவில்லையா? உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், எறும்பு மருந்து போன்ற ரசாயனங்களை உபயோகிப்பது சரிவராது. எறும்புகளைக் கொல்லுவதை விட அது வராமல் தடுப்பது சிறந்த வழியாகும்.
பேக்கிங் சோடா :
உங்கள் வீட்டில் எங்கெல்லாம் எறும்பு வருகிறதோ அங்கெல்லாம் பேக்கிங் சோடாவைத் தூவி விடுங்கள். இதனின் நெடிக்கு எறும்புகள் அப்பகுதிக்கு வராது. மரப்பலகையிலும் பேக்கிங் சோடாவைப் போடலாம்.
மிளகு :
மிளகில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பினும், எறும்புகளுக்கு மிளகு எதிரி. இதனின் நெடிக்கு எறும்புகள் அப்பகுதிக்கு வராது. மிளகு தூள் அல்லது மிளகு தூளைத் தண்ணீரில் கலந்துகூட உபயோகிக்கலாம்.
பட்டை :
சமையலறையில் முக்கிய மசாலா பொருளாக இருக்கும் பட்டை தூளும் எறும்புகளை விரட்ட உதவியாக இருக்கும். இதனையும் தண்ணீரில் கலந்து கதவுகள், உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் இடம் ஆகியவற்றில் தெளிக்கலாம்.
எலுமிச்சை சாரு :
எறும்புகளுக்குப் புளிப்பு ஒத்துவராது. அதனால் எலுமிச்சை சாரை எறும்புகளுக்கு எதிராக நீங்கள் பயன்படுத்தலாம். இது நல்ல பலன்கள் தரும்.
வினிகர் :
உணவுப் பொருட்களைப் பதப்படுத்த உபயோகிக்கப்படும் வினிகரை, எறும்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். இதனையும் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.