பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக மட்டுமின்றி, முதன்மையானதாகவும் விளங்குகிறது. திருப்பதியில் நடைபெறுவது போலவே ஸ்ரீரங்கத்திலும் வருடம் முழுவதும் உற்சவங்கள் நடந்து கொண்டே இருக்கும். இதில் பல உற்சவங்கள் வித்தியாசமானதாகவும், வேறு எங்குமே காண கிடைக்காத நிகழ்வாகவும் இருக்கும். நெல் அளத்தல் வைபவம், சேர்த்தி வைபவம் போன்றவை இங்கு மட்டுமே நடைபெறும் உற்சவங்களாகும்.
ஆண்டு முழுவதும் எத்தனை வைபவங்கள் நடந்தாலும் வெகு விசேஷமாக நடத்தப்படுவது வைகுண்ட ஏகாதசி விழா தான். வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு மட்டுமே 22 நாள் உற்சவமாக நடத்தப்படும். இதில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆலய வலம் வரும் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளை காண்பதற்கே கண் கோடி வேண்டும். ஸ்ரீரங்கா…கோவிந்தா என பக்தர்கள் முழக்கத்துடன் நம்பெருமாள் காட்சி தருவார்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி :
மார்கழி மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் என்றாலும் பூலோக வைகுண்டம் என ஆழ்வார்களாலும் அடியவர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் மட்டுமே வைகுண்ட ஏகாதசி விழா 22 நாட்கள் விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது. இந்த கோவிலில் மட்டும் 22 நாட்கள் உற்சவம் நடத்தப்படுவதற்கு என்ன காரணம், அதில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பகல் பத்து உற்சவத்திற்கான காரணம் :
தன்னுடைய பக்தர்கள் பாசத்துடனும், பக்தியுடன் முன் வைக்கும் கோரிக்கைகளை பெருமாள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என்பதற்கு சாட்சியாக விளங்குவது ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பெருமாலின் பெருமைகள் பற்றி ஆழ்வார்கள் பலரும் பலவிதமான பாடல்களை பாடுகிறார்கள். ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், பல ஊர்களிலும் உள்ள பெருமாளை தரிசனம் செய்து விட்டு, கடைசியாக ஸ்ரீரங்கம் வந்தார். அவர் பெருமாளிடம் சென்று, “ஆழ்வார்கள் அனைவரும் உன்னை போற்றி எத்தனையோ பாடல்கள் பாடி உள்ளனர். அந்த பாடல்களை நீ கேட்டு உள்ளம் மகிழ வேண்டும்” என விண்ணப்பம் செய்கிறார்.
பகல் பத்து உற்சவம் :
நம்மாழ்வாரின் கோரிக்கையை ஏற்ற பெருமாள், அந்த பாடல்களை நான் கேட்பதற்கு சரியான நாளே நீயே தேர்வு செய் என்கிறார். நம்மாழ்வாரும், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என நீயே கீதையில் சொல்லி உள்ளாய். அதனால் உனக்கு விருப்பமான மார்கழி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை இதை துவங்கலாம் என்கிறார். இதை மகிழ்வுடன் ஏற்ற பெருமாள், இது ஆண்டுதோறும் உற்சவமாக நடத்தப்படும். இது பகல் பத்து என அழைப்படும் என்கிறார். அதன் படி மார்கழி வளர்பிறையில் தினமும் 200 பாடல்கள் வீதம் 10 நாட்களில் 2000 பாடல்களை கேட்டு மகிழ்கிறார் பெருமாள்.
இரா பத்து உற்சவம் :
இதை பார்த்த திருமங்கையாழ்வார், பெருமாளிடம் சென்று, ஆழ்வார்கள் பாடியலில் 2000 பாடல்களை மட்டும் கேட்கிறாயே. மீதமுள்ள பாடல்களை கேட்டு மகிழக் கூடாதா என கேட்க பெருமாளும் ஒப்புக்கொண்டு கேட்கிறார். இதன் படி பகல் பத்து உற்சவத்தின் போது 10 நாட்களில் 2000 பாடல்களும், அடுத்து வரும் இரா பத்து உற்சவத்தின் போது 10 நாட்களும் மீதமுள்ள 2000 பாடல்களும் என நாலாயிர திவ்யபிரபந்தங்களும் பாடப்படும் வழக்கத்தை திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கத்தில் ஏற்படுத்தினார். மார்கழி மாதத்தில் நாலாயிர திவ்யபிரபந்தங்களை வைணவ தலங்களில் திருத்தொண்டு புரிபவர்களால் பாடப்படும். இதற்கு அரையர் சேவை என்று பெயர். அரையர் சேவை ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் மிகச் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஒன்று.
வைகுண்ட ஏகாதசி விழா :
திருநெடுந்தாண்டம் என்ற உற்சவத்துடன் துவங்கும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் நம்பெருமாள், பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி நாலாயிர திவ்யபிரபந்தங்களை கேட்டு மகிழ்வார். வைகுண்ட ஏகாதசியின் 10வது நாளில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இதோடு பகல் பத்து உற்சவம் நிறைவடையும். 11வது நாள் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும். அன்றைய தினம் மூலவர் முத்தங்கி சேவையிலும், நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை அணிந்து சொர்க்கவாசலை கடந்து வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
ஸ்ரீரங்கம் உற்சவங்கள் :
வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களும் இரா பத்து உற்சவம் நடைபெறும். இந்த 10 நாட்களும் மூலவர் ரங்கநாத பெருமாளை முத்துக்களால் ஆன ஆடையால் அலங்கரிக்கப்பட்ட முத்தங்கி சேவையில் தரிசிக்கலாம். இரா பத்து உற்சவத்தின் 8ம் நாளில் நம்மாழ்வார் மோகினி அலங்காரத்திலும், நம்பெருமாள் குதிரை வாகனத்திலும் எழுந்தருள்வார்கள். அன்றைய தினம் திருமங்கை மன்னன் வேடுபரி நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவில் 21வது நாளில் தீர்த்தவாரியும், 22வது நாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அழிக்கும் உற்சவமும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2023 :
ஸ்ரீரங்கத்தில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 12 ம் தேதி துவங்கியது. டிசம்பர் 23ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 04 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். டிசம்பர் 13 ம் தேதி முதல் டிசம்பர் 23 ம் தேதி வரை பகல் பத்து உற்சவமும், டிசம்பர் 23ம் தேதி துவங்கி, ஜனவரி 02ம் தேதி வரை இரா பத்து உற்சவமும் நடைபெற உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் துவங்கி வைக்கப்பட்ட பகல் பத்து, இரா பத்து உற்சவம் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது.