தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று திட்டமிடப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதுரை பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது. வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை காலை முதலமைச்சர் பயணம் செய்கிறார். தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று திட்டமிடப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதுரை பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு நாளை (டிச.21) காலை 10.15 மணிக்கு நேரடியாக தூத்துக்குடி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட பின் நாளை இரவு 10:40 விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.